Wednesday, December 11, 2013

கோத்தகிரி, ஊட்டச்சத்துணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டச்சத்துணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ஊட்டி, : கோத்தகிரி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை சார்பில் ஊட்டச் சத்துணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 


பாண்டியராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். 

அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ‘நமது முன்னோர் விவசாயத்தின் மூலம் கிடைத்த உணவுகளை உண்டு வந்தனர். தற்போது நவீன உணவு வகைகளை பழக்கப்படுத்தி கொண்டோம். இந்த உணவுகள் மனிதர்களாகிய நமக்கு பாதகமாகி வருகிறது. டின் புட்ஸ், பாதுகாக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள் என எல்லாம் உப்பு மற்றும் அமில தன்மை உடைய உணவுகளாக மாறி வருகின்றன.

 இவற்றால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் 25 வயது முதலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பார்வை குறைபாடு, சத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளான ராகி, கம்பு, தினை, கோதுமை, சோயா, நெல் போன்ற உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் பொரித்த உணவுகள், நொறுக்கு தீனிகளை தவிர்த்து பருப்பு, பயறு, கடலை வகைகளை அவித்து உண்ணலாம். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்’ என்றார்.

மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ‘விளம்பரங்களை பார்த்து நமது உணவுகளை தேர்வு செய்கின்றோம். இவை உடலுக்கு எந்த பயனையும் தருவதில்லை. இதில் நிறம் மற்றும் சுவைகளாக சேர்க்கப்படும் ரசாயனங்கள் புற்று நோயை உண்டாக்குகின்றன’ என்றார். 
கோத்தகிரி நுகர்வோர் சங்க தலைவர் நாகேந்திரன் பேசுகையில், ‘சிப்ஸ், கார வகைகள், ஐஸ்கீரிம் போன்ற உணவுகளை தவிர்த்து, தரமான உணவுகளை வீடுகளில் தயாரித்து உண்ண பழகி கொள்ள வேண்டும்’ என்றார்.