Friday, February 17, 2017

முதலை குரங்கிற்குக் கதை கூறுகிறது

(முதலை குரங்கிற்குக் கதை கூறுகிறது)
ஒரு நாள் தனிமையிலிருக்கும்போது உதிட்டிரனைப் பார்த்துக் கேட்கிறான் அரசன்: எந்தப் போரில் உனக்கு இந்த வெட்டுக்காயம் ஏற்பட்டது?
குயவன்: நான் சூளை இட்டுக்கொண்டிருந்தபோது, ஓர் ஓடு விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டது எசமான்!
அரசன்: எப்படியோ தவறு நிகழ்ந்து விட்டது. இது இரண்டாம் பேருக்குத் தெரிவதற்கு முன்னால் நீ ஓடிப்போ. பெரு வீரர்கள் எதிரில் உன் உயிர் சல்லிக்காசும் பெறாது.
குயவன்: சுவாமி, என் கைகால்களைக் கட்டி, என்னைப் போர்க்களத்தில் விட்டு என் திறமையை நீங்கள் காணுங்கள்.
அரசன்: நீ பிறந்த குலம் போர் இடும் அனுபவத்தில் வந்ததன்று. அப்படியாக, நீ நரிக்குட்டிபோல் வீணாக ஏன் துள்ளுகிறாய்? குலைக்கிற நாய் வேட்டை பிடிப்பதில்லை.
குயவன்: இந்த நரிக்குட்டி யாரிடத்தில் தன்னைப் புகழ்ந்துகொண்டது? சொல்லுங்கள் அரசே!
அதற்கு அரசன்: ஒரு வனத்தில் ஒரு சிங்கம் தன் துணையோடு வசித்துவந்தது. அதற்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அது பல விலங்குகளைக் கொன்று தன் பெண் சிங்கத்திடம் கொடுத்தது. “இக்குட்டிகளுக்கு புத்தி தெரிகின்ற வரை இவர்களை நம்பித் தனியாக விடவேண்டாம்” என்று எச்சரித்தது. தினமும் தான் மட்டும் சென்று வேட்டையாடி வந்தது. ஒரு நாள் அதற்கு ஒன்றும் கிடைக்காமல் திரும்பும்போது வழியில் ஒரு அப்போதுதான் பிறந்திருந்த ஒரு நரிக்குட்டியைக் கண்டது. அடிக்காமல் பிடித்துக் கொண்டுவந்து, தன் பெட்டையிடம் கொடுத்தது. அது மிகவும் அழகாக இருந்ததால், பெண்சிங்கம் அதைக் கொல்லாமல் தன் பிள்ளைகளோடு அதையும் வைத்துக் காப்பாற்றலாயிற்று. வயதுவந்ததும் மூன்று குட்டிகளும் ஒன்றாக ஒருநாள் காட்டுக்குள் சென்றன. அங்கே ஒரு யானையைப் பார்த்ததும், அதைக் கொல்லவேண்டும் என்று சிங்கக்குட்டிகள் தயங்கிநிற்க, “இது நமக்கு ஆகாத வேலை” என்று சொல்லிவிட்டு நரிக்குட்டி தங்கள் இடத்திற்கு ஓடிப்போயிற்று. தாய்ச்சிங்கத்திடம் சிங்கக்குட்டிகள் அதன் செயலைக் கூறின.
நரிக்குட்டி: நான் இவர்களைவிட வீரத்தில் குறைந்தவனோ? இவர்கள் என்னைப் பழித்து ஏன் சிரிக்கிறார்கள்? கூழுக்கு மாங்காய் தோற்குமா? நான் இவர்களைவிட வீரத்தில் சிறந்தவன் என்று காட்டுவேன். கொட்டினால்தான் தேள், இல்லாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
அதைக் கேட்ட பெண்சிங்கம், அதைத் தனியே அழைத்துக் கொண்டு சென்று: நீ நரிக்குட்டி, உன் குலத்தில் யானையைக் கொல்லும் சக்தி கிடையாது. உனக்கு நான் பால் கொடுத்து வளர்த்ததால் இப்படிப்பட்ட வீரம் பேசுகிறாய். என் குட்டிகள் உன்னை இன்னான் என்று அறிந்துகொள்வதற்கு முன்பாக நீ ஓடிப்போய்விடு. இல்லாவிட்டால் இவர்கள் கையில் அகப்பட்டு இறந்து போவாய்.
அதைக் கேட்ட நரி ஓடிப்போயிற்று. அதுபோல நீ குயவன் குலத்தைச் சேர்ந்தவன் என்பது வெளிப்படும் முன்பாக ஓடிப்போய்விடுவது நல்லது” என்றான் அரசன். அதைக் கேட்ட குயவன் அங்கிருந்து ஓடிப் போய்விட்டான்” என்றது முதலை.
இதைக் கேட்டும் சுமுகன் ஆகிய குரங்கு அயரவில்லை.
குரங்கு: பெண்களின் மனத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. ஆகையால் உன் பேச்சில் நம்பிக்கை வரவில்லை.
முதலை: எப்படி நீ இதைச் சொல்கிறாய்?
குரங்கு: ஒரு நகரத்தில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி எல்லாரோடும் கலகம் செய்து சண்டை போடுகிறவளாயிருந்தாள். அதனால் அவன் தன் ஊரை விட்டு வெளியேறிச் சென்றான். அப்போது அவன் மனைவி, “கணவரே, எனக்குத் தண்ணீர் தாகம் எடுக்கிறது. எங்கேயாவது சென்று கொண்டுவாருங்கள்” என்றாள். அவளைத் தனியே விட்டு அவன் நீர் கொண்டுவரச் சென்றான். திரும்பி வந்து பார்க்கும்போது அவள் இறந்துகிடந்தாள். அதைக் கண்டு அவன் அழுது புலம்பும்போது, “உன் வயதில் பாதியை அவளுக்குக் கொடுத்தால் அவள் பிழைத்து எழுந்திருப்பாள்” என்று ஓர் அசரீரி வாக்கு கேட்டது. அதைக் கேட்ட பார்ப்பனனும் மூன்று முறை, “என் பாதிவயதை இவளுக்குக் கொடுத்தேன்” என்று மந்திரம் போல் உச்சரித்தான். அவள் பிழைத்தெழுந்தாள். பிறகு இருவரும் ஒரு நகரத்துக்குச் சென்றனர். அப்போது பார்ப்பனன் செலவு வாங்கக் கடைக்குச் சென்றான். அச்சமயத்தில் பக்கத்தில் ஒரு முடவன் மிகச் சிறப்பாகப் பாட்டுப் பாடுவதைப் பார்ப்பனி கேட்டாள். அவனிடம் சென்று “உன் இசையில் நான் மயங்கிவிட்டேன்; என்னை ஏற்றுக் கொள்” என்று வேண்டினாள். அவனும் ஏற்றுக்கொண்டான். பிறகு பார்ப்பனியின் பரிந்துரையின் பேரில் அவனும் பார்ப்பனன் வீட்டிலேயே வாழ்ந்து வரலானான். “நீங்கள் இல்லாத போது இவன் எனக்குத் துணையாக இருக்கட்டும்” என்று மனைவி கூறியதை அவன் நம்பினான். எங்கு சென்றாலும் அப்பெண் அந்த முடவனைத் தன் முதுகில் கட்டி எடுத்துக்கொண்டு சென்றாள். அவள் கணவனும் அதைத் தவறாக நினைக்கவில்லை. ஒருசமயம் அவர்கள் காட்டுவழியில் செல்லும்போது அப்பெண், தன் கணவனை ஒரு கிணற்றில் உருட்டிவிட்டு, முடவனை ஒரு பெட்டியில் வைத்துத் தலைமீது தூக்கிச் சென்றாள். அடுத்த நகரம் வந்தது. அங்கு அவள் பெட்டியைச் சுமந்து செல்வதைக் கண்ட அரசன், அவளிடம் “இது என்ன?” என்று கேட்டான். “இவர் என் கணவர். இவர் நடக்க முடியாமல் இருப்பதால் இப்படித் தலையில் சுமந்து செல்கிறேன்” என்றாள் அவள். ‘மிகக் கற்புடைய பெண்மணி இவள்’ என்று மகிழ்ச்சியடைந்த அரசன், அவளைத் தன் உடன்பிறப்பு என்றே எண்ணி ஒரு வீட்டை அளித்து வாழ வைத்தான். இது இப்படியிருக்க, கிணற்றிற்கு நீர் பருக வந்த ஒருவன் பிராமணனைக் காப்பாற்றினான். அவன் வெளியே வந்து தன் மனைவியையும் முடவனையும் தேடிக் காணாமல் திகைத்து, தேடியவாறே நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டுவிட்ட அவன் மனைவி, அரசனிடம் சென்று, “இவன் என் கணவனுக்கு விரோதி. என் கணவன் காலை வெட்டியவன் இவன்தான்” என்று கூறினாள். அரசன் அதைக் கேட்டு பிராமணனைக் காவலில் வைக்க முனைந்தான். அப்போது அப்பார்ப்பனன், “ஓ அரச சிகாமணியே! நீங்கள் மிகவும் தர்ம குணம் வாய்ந்தவராக இருக்கிறீர்கள். ஆகவே நான் சொல்வதை தயவு கூர்ந்து கேளுங்கள்” என்று தன் குறைகளை எல்லாம் சொன்னான். அதைக் கேட்ட அரசன் ஒரு பஞ்சாயத்தை நியமித்து விசாரிக்குமாறு சொல்ல, அவர்களும் அடுத்த ஊர்களுக்கெல்லாம் சென்று விசாரித்துவந்து பார்ப்பனன் குற்றமற்றவன், அந்தப் பெண்தான் கெட்டவள் என்று தெரிவித்தனர். அதைக் கேட்ட அரசன் பார்ப்பனனை விடுவித்து அவன் மனைவியை தண்டித்தான். அதுபோலப் பெண்கள்தான் எங்கும் அனர்த்தங்களுக்கு மூலமாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் பேச்சுக்குக் காதுகொடுக்கலாகாது” என்று குரங்கு கூறியது.
மேலும் அவ்வாறு காதுகொடுத்து, நந்தனன் என்னும் அரசனும் வரருசி என்ற அவன் அமைச்சனும் சபை நடுவில் ஏளனம் அடைந்தார்கள் என்றது.
முதலை: அது எவ்விதம்?
குரங்கு: ஒரு காலத்தில் நந்தனன் என்ற நல்லரசன் ஆண்டுவந்தான். ஒருநாள் அவனிடம் ஊடல் கொண்ட அவன் மனைவி, அவன் என்ன சமாதானம் கூறியும் கேட்காமல், “நீ வாயில் கடிவாளம் போட்டுக்கொண்டு உன் முதுகின்மேல் என்னைக் குதிரைபோலச் சுமந்து செல்லவேண்டும். மேலும் குதிரைபோலக் கனைக்கவும் வேண்டும். அப்போதுதான் உனக்கு நான் செவி கொடுப்பேன்” என்று கூறினாள். அவளும் ஏதோ அன்பால் கேட்கிறாள் என்று கருதி அப்படியே அரசன் செய்தான். அதை அமைச்சனின் மனைவி கேள்விப்பட்டாள். அவளும் தன் கணவனிடம் பேசாமல் முறுக்காக இருந்தாள். “நீ ஏன் பேசாமலிருக்கிறாய்” என்று அமைச்சன் தன் மனைவியைக் கேட்டான். “நீ தலையை மொட்டை அடித்துக் கொண்டு என்னை வலமாகச் சுற்றிவந்து காலில் விழுந்தால்தான் நான் உன்னிடம் பேசுவேன்” என்று அவள் சொன்னாள். அவனும் வேறு வழியின்றி அப்படியே செய்தான்.
மறுநாள் அரச சபையில் அவனைக் கண்ட அரசன், “ஏன் இப்படி மொட்டை அடித்துக் கொண்டு வந்திருக்கிறாய்” என்று கேட்டான். “நீங்கள் குதிரையைப் போல் கனைத்தபடியால் அடியேன் மழுங்க மொட்டை அடித்துக் கொள்ள நேர்ந்தது” என்று அமைச்சன் கூறினான். அதைக் கேட்ட சபையினர் விசாரித்து மிக எளிதாக நடந்தவற்றை அறிந்துகொண்டார்கள். ஆகவே பெண்களுடைய உசிதமற்ற வார்த்தைகளைக் கேட்டால் அமைதியாக இருந்துவிட வேண்டும். அப்படிச் செய்யாதவர்களோடு உரையாடுபவன், புலித்தோலைப் போர்த்திய கழுதையைப் போல் துன்பமடைவான்.
முதலை: அது எப்படி நேர்ந்தது?
pancha thandhira kadhaigal12-1
குரங்கு: ஓர் ஆற்றங்கரையில் ஓர் ஏழை வண்ணான் வாழ்ந்தான். அவ்வூரில் அக்கழுதைக்கு உரிய தீனி கிடைக்கவில்லை. அவன் தன் கழுதை தீனியின்றி நாளுக்கு நாள் இளைத்துவந்ததைப் பார்த்துக் கவலைப்பட்டான். ஒருநாள் காட்டுப்பக்கம் போகையில் ஒரு புலித்தோல் அவனுக்குக் கிடைத்தது. அதைக் கொண்டுவந்து தன் கழுதைமேல் நன்றாகப் போர்த்திக் கட்டிவிட்டான். அது புலித்தோலோடு ஊரார் பயிர்களுக்கிடையில் புகுந்து நன்றாக மேய்ந்துவந்தது. அதைப் புலி என்று நினைத்து ஊரார் பயந்திருந்தார்கள். ஓரிரவு அக்கழுதை இவ்வாறு மேய்ந்து கொண்டிருக்கும்போது எங்கோ தொலைவில் ஒரு பெண் கழுதையின் குரலைக் கேட்டு இதுவும் பெருங்கூச்சல் போட்டுக் கத்தலாயிற்று. அப்போது அதைக் கழுதை என்று அறிந்துகொண்ட கொல்லைக்காரன் நன்றாக அதை அடித்துத் துரத்தினான். ஆகவே பெண்களுடன் வீணாகப் பேசலாகாது. அப்படியிருக்கும்போது அவளுக்காக நீ என்னைக் கொல்வதற்கு எண்ணினாய். நம்பிக்கைக்குக் கேடு விளைவித்தல் உன் இனத்துக்கு இயல்பாக இருக்கிறது. அது சாதுக்களின் சேர்க்கையாலும் சரியாகாது. மேலும் உன்னைப் போன்ற துஷ்டர்களுக்கு உபதேசம் செய்தும் பயனில்லை.
அச்சமயத்தில் மற்றொரு முதலை அங்கே வந்து, “உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த உன் மனையாட்டி ஏதோ காரணத்தினால் இறந்துபோனாள்” என்று தெரிவித்தது. அதைக் கேட்ட
முதலை: நான் கொடியவன் ஆதலினால் இத்தகைய துயரம் நேர்ந்தது. நண்பனுக்கும் பொல்லாதவன் ஆனேன். பெண்டாட்டியும் இறந்துபோனாள். வீடும் காடாயிற்று. ஆகவே நண்பா, என் பிழையை மன்னித்துவிடு, நானும் இறக்கப் போகிறேன்.
குரங்கு: உன் மனைவியின் பேச்சைக் கேட்டு என்னைக் கொல்லவந்தாய். இப்போது அவள் சாவைக் கேட்டு மிகவும் துக்கப்படுகிறாய். துர்க்குணம் உடைய அவள் இறந்துபோனதை மறந்துவிடு. தன் கணவனைவிட்டு முன்பு ஒரு பெண், வேறொருவனை நாடியதால் அவளைப் பார்த்து நரியும் சிரித்தது.
முதலை: நரி யாரைப் பார்த்து சிரித்தது? அது என்ன கதை?
குரங்கு: ஒரு நகரத்தில் ஓர் அரசாங்க அலுவலன் இருந்தான். அவன் மனைவி அந்நிய ஆடவர்கள் மேல் ஆசை கொண்டிருந்தாள்.
அவளைக் கண்ட ஒரு வாலிபன்: பெண்ணே, என் மனைவி இறந்துபோனதால் நான் மிகவும் துயரடைந்துள்ளேன். என் துக்கத்திற்குப் பரிகாரமாக நீ துணையிருந்தால் மிகவும் புண்ணியமுண்டு. உன்னைப் பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன்.
பெண்: என் கிழக் கணவன் மிகவும் செல்வம் சேர்த்து வைத்திருக்கிறான், உன் ஆசை இப்படி இருக்குமானால், நீ அவன் பணத்தை எடுத்துக் கொண்டு வந்துவிடு. நாம் இருவரும் வேற்றூர் போய்விடலாம்.
வாலிபன்: மிகவும் நல்லது. அப்படியே செய்கிறேன்.
அவன் மறுநாள் நேரம் பார்த்து அந்த அலுவலன் வீட்டில் கொள்ளையடித்துக் கொண்டு அவன் மனைவியையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான். இரண்டு காதம் சென்ற பிறகு வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது.
அதைக் கண்ட வாலிபன்: இந்த ஆறு மிகவும் ஆழமாக இருக்கிறது. ஆகவே நான் முதலில் பொருள்களை எல்லாம் கொண்டுபோய் அக்கரையில் வைத்துவிட்டு வந்து உன்னைத் தூக்கிக் கொண்டு செல்கிறேன்.
அவளிடமிருந்த பணத்தையெல்லாம் பெற்றுக் கொண்ட பிறகு,
வாலிபன்: உன் சுமையான பட்டுப்புடவையையும் கொடுத்தால் வைத்துவிட்டு வருகிறேன். அதற்குப் பிறகு உன்னைத் தூக்கிச் செல்லுதல் எளிதாக இருக்கும்.
அவளும் அதை நம்பித் தன் புடைவையையும் அவிழ்த்துக் கொடுத்தாள். அவன் அக்கரை சென்றதும் பணத்தையும் புடைவையையும் எடுத்துக் கொண்டு ஓடிப்போனான். அதைக் கண்ட பெண், “நான் செய்த காரியத்துக்குப் பலன் கைமேல் கிடைத்துவிட்டது. இதை என் கணவன் அறிந்தால் என்ன செய்வானோ” என்று நினைத்து ஏங்கியபடி, வெட்கத் தினால் ஆற்றில் சற்றே இறங்கி நீரில் அமர்ந்திருந்தாள். அப்போது அங்கே ஒரு நரி வந்தது. ஆற்றில் கரையருகே பெரிய ஒரு மீன் துள்ளிக் குதித்ததைக் கண்டு அது தன் வாயிலிருந்து மாமிசத்தைக் கரையில் போட்டுவிட்டு, மீனைப் பிடிக்கத் தாவியது. ஆனால் மீன் சடக்கென்று ஆழத்தில் போய்விட்டது. நரி மீண்டும் வந்து மாமிசத்தை எடுக்க முனைவதற்குள் ஒரு பருந்து திடீரென்று அதை எடுத்துக்கொண்டு பறந்து விட்டது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த
பெண்: மாமிசமும் போயிற்று மீனும் போயிற்று. இனி வானத்தைப் பார்த்து ஆவதென்ன?
என்று நரியைப் பார்த்துச் சிரித்தாள். இதைக் கேட்ட
நரி: நானாவது பரவாயில்லை. நீ உன் கணவனையும் விட்டு காதலனையும் விட்டு, செல்வத்தையும் புடவையையும் ஒன்றாக விட்டல்லவா உட்கார்ந்திருக்கிறாய்?
என்று அவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் கணவனோ தன் செல்வம் போனதற்குச் சற்றே கவலைப் பட்டாலும், மனைவியைக் குறித்து, “கெட்டவள் விட்டுப் போனாள்” என்று மகிழ்ச்சியாகவே இருந்தான். ஆகவே நீயும் மகிழ்ச்சியாக வீடுபோய்ச் சேர்” என்றது குரங்கு.

கட்டுரை

புதுமைப்பித்தனின் கவிதைகள்

February 4, 2017
தமிழ்ச் சிறுகதை உலகில் புதுப்புது முயற்சிகளையும் புதுமைகளையும் கையாண்ட சொ.விருத்தாசலம் எனும் வித்தகரை தமிழ் ....

தனித்தமிழும் இனித்தமிழும்

January 28, 2017
தனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை. வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ....

மறக்க முடியுமா? அறிஞர் அண்ணா !!

January 28, 2017
அறிஞர் அண்ணா – பிற மொழி ஆதிக்கத்தால் தமிழ் நாடு இருள் சூழ்ந்த நிலையில் ....

ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு

January 21, 2017
பாட்டும் தொகையும் என அறியப்படும் சங்க இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. பாவகையினால் ....

தமிழே! தாயே! பள்ளி எழுக! தமிழ் உயர்வே துள்ளி வருக!

January 13, 2017
மார்கழி மாதத்தின் இனிய கீதம் திருப்பள்ளி எழுச்சி. அயர்ந்து தூங்கும் இறைவனை இனிய தமிழால் ....

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”- கவிஞர் இன்குலாப்

January 13, 2017
21 ஆம் நூற்றாண்டின் பொதுவுடைமை தத்துவத்தின் புரட்சிக்கவி இன்குலாப் என்றால் அது மிகையாகாது. எந்த ....

பண்பாட்டு அறிதல்களில் தொடர்ச்சி

January 13, 2017
மானுட அறிதல் ஒரு தொடர் செயல்பாடு. பிற மனிதர்கள் அறிந்தவற்றை கற்றுக் கொள்ளும் திறனை ....

நெல்சன் மண்டேலா

1918 ஆம் ஆண்டு சூலை 18 அன்று தென் ஆப்பிரிக்காவில், குலு கிராமத்தில் மண் குடிசையில் பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு. அவரது அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர், ஆயினும் மகனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். 1938ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால் மண்டேலா, முதலில் “கெல்ட் டவுன்” என்ற கல்லூரியிலும், பிறகு “போர்ட்ஹேர்” என்ற கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். போர்ட் ஹரே (fort hare ) பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத்தொடங்கியது. மாணவர் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்திய காரணத்தினால், கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் கல்வியை கைவிடவில்லை. நெல்சன் மண்டேலா மூன்று முறை வழக்கறிஞர் தேர்வில் தோற்றாலும் தன் விடாமுயற்சியால் வழக்கறிஞராகி ஆப்பிரிக்க பூர்வ குடிமக்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கினார்.
தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக இருந்த நிலையிலும், சிறுபான்மை வெள்ளையர்களே ஆட்சி அதிகாரங்களில் இருந்தனர். பெரும்பான்மை கறுப்பின மக்கள், மொழியால் பிரிந்து இருந்தபடியால் வெள்ளையர்கள் அவர்களை இலகுவாக அடக்கி ஆண்டனர்.
கறுப்பர்கள் நலனை பாதுகாக்க, அவர்கள் இன ஒடுக்கலைக்  களைய 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இவரின் தலைமையில் அறப்போராட்டங்கள் ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 -ல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
Siragu nelson mandela4.jpgSiragu nelson mandela4.jpgSiragu nelson mandela4.jpgSiragu nelson mandela3
பின் சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயல்பட்டதின் காரணமாக  1960-களில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960-ல் ஆப்பிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை சார்பெவில்லே நகரில் நடத்தினார். காவல்துறையின் அடக்குமுறை காரணமாக  69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5 தேச துரோக  குற்றம் செய்ததாக மண்டேலாவும் அவரின் தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 1961 இல் அனைவரும் விடுதலை பெற்றனர். அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாது என உணர்ந்த மண்டேலா ஆயுதமேந்தி போராட நினைத்தார். அந்த வழிமுறையை செயல்படுத்தினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையர் அரசு முடிவு செய்தனர். 1961 ஆம் ஆண்டு அரசின் நெருக்கடி காரணமாக மண்டேலா தலைமறைவானார்.
1962 ஆகஸ்ட் 5 ஆம் நாள் நெல்சோன் மண்டேலா வெள்ளையர் அரசால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தனர், கலகம் செய்தனர்  என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கு 1963 இல் ரிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டது. மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு சூன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1962ல் ஆரம்பித்த அவரின் சிறைவாசம் 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் தொடர்ந்தது. உலக வரலாற்றில் இன விடுதலைக்காக இவ்வளவு காலம் சிறையில் இருந்த தலைவர்கள் கிடையாது. மனைவியை சந்திக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு காரணத்தினால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் உலகம்  முழுவதும் நடைபெற்றன. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
“மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்றது தென்னாப்பிரிக்க அரசு. ஆனால் மண்டேலா இறுதி வரை அடிபணிய மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1990-ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை ஆகும் போது அவர் வயது 71. ஒரு தலைவர் தன் இன மக்களுக்காக தன் வாழ்நாளின் முக்கிய பகுதிகளை சிறையில் கழித்தார் என்பது என்றென்றும் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியது.
N.Mandela in his cell on Robben Island (revisit} 1994
சிறைக் கொடுமைகளைப் பற்றி அவர் கூறும் போது , “சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை. சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்” என்று மிகப் பரிவோடு தன் மக்களின் வேதனையைத்தான், தன் சிறைவேதனையைவிட பெரிதாக நினைத்தார்.
இந்தியாவின் பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்கள் ஒரு பாராட்டுக் கடிதம் நெல்சன் மண்டேலாவுக்கு அவர் விடுதலை ஆன ஆண்டு அனுப்புகின்றார். அதில், “உங்களது சுதந்திரப் போராட்டத்திற்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று எழுதி அனுப்பினார்.
சிறையில் இருந்து கேப்டவுன் நகருக்குத் திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு கட்சியினர் மத்தியில் இவ்வாறு பேசினார்,
“இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் மக்களாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.” என்றார்.
1994 மே 10, அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபரானபோது,
“நம்மை ஒடுக்கியவர்களைப் பார்த்து நாமெல்லாம் தென்னாப்பிரிக்கர்கள் பழைய ரணங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய தென்னாப்பிரிக்காவை உருவாக்குவோம், எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நட்பு கரத்தை நீட்டுகிறேன் இந்த நாட்டை மறுநிர்மாணம் செய்ய உதவுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்”. என பெருந்தன்மையோடும், பொறுப்போடும் பேசினார் மண்டேலா!!
அவர் போராட்டத்தின் தூண்டுதலை இந்தியப் போராட்டத்தில் இருந்தே பெற்றார் என்பதை, “The Indian campaign became a model for the type of protest that we in the youth league were calling for” (இளைஞர் இயக்கத்தின் சார்பில் நாங்கள் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு இந்தியர்கள் நடத்திய இயக்கமே முன் மாதிரியாக இருந்தது.) என்றார்.
பாரத ரத்னா விருதும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது.  அவருடைய பிறந்த நாளை ஐ.நா சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்தது.
1993 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு நெல்சன் மண்டேலாவிற்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்தபின் 1999-ம் ஆண்டு பதவியை விட்டு விலகினார். இரண்டாவது முறை அவர் அதிபராக விரும்பவில்லை.
Siragu nelson mandela7
‘46664’ எனும் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினார் நெல்சன் மண்டேலா.
‘எய்ட்ஸுக்காக உங்கள் வாழ்வில் இருந்து ஒரு நிமிடத்தை ஒதுக்குங்கள்’ என்னும் வாசகத்துடன் தொடங்கப்பட்ட பரப்புரை, பரவலான கவனத்தைப் பெற்றது. (466 என்பது ரோபன் தீவுச் சிறையில் மண்டேலாவின் கைதி எண். 64 சிறையிலிருந்த வருடத்தைக் குறிக்கிறது). நான் ஒரு எய்ட்ஸ் நோய் சிகிச்சை ஆதரவாளர் என்னும் வாசகத்தை தனது டி ஷர்ட்டில் அணிந்து பெருமிதத்துடன் வலம் வந்தார். 2005ல் ஒரு கூட்டத்தில், வெடித்துக் கிளம்பிய அழுகைக்கிடையே ஓர் உண்மையை ஒப்புக்கொண்டார். ஆம், என் சொந்த மகன் மக்காதோ, எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு, இறந்துபோனான். தென் ஆப்பிரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் ஒன்று சேர்ந்து எய்ட்ஸை விரட்டியடிக்கவேண்டும் என்றார்.
” I detest racialism, because I regard it as a barbaric thing, whether it comes from a black man or a white man.” “கறுப்பர்கள் செய்தாலும், வெள்ளையர்கள் செய்தாலும் நான் இனவாதத்தை முழுவதும் வெறுக்கிறேன், ஏனெனில்  இனவெறி என்பது காட்டுமிராண்டித்தனம்” என்பார் நெல்சன் மண்டேலா.
ஆப்பிரிக்காவின் முதன்மையான மகன் என மண்டேலாவை வருணிக்கின்றார் கியூபா புரட்சியாளர் காஸ்ட்ரோ. மண்டேலா ஆப்பிரிக்காவுக்கோ, ஐரோப்பாவிற்கோ சொந்தமானவர் அல்லர், அவர் உலகுக்கு சொந்தமானவர் என்கிறார் மண்டேலாவால் ஈர்க்கப்பட்டு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நதின் கார்டிமர்.
Siragu nelson mandela6
2013 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி நெல்சன் மண்டேலா எனும் போராட்டக்காரர் தன் பயணத்தை முடித்துக்கொண்டார். அவரின் வாழ்க்கையின் மூலம் அவர் சொன்ன வாக்கியங்கள் இவை.
“விடுதலையை யாராலும் கொடுக்கமுடியாது. பேச்சுவார்த்தைகள் மூலம் பெறமுடியாது. போராடித்தான் பெற்றாகவேண்டும். வாழ்க்கை என்பது போராட்டமே!.”  உலகத்தில் விடுதலை இயக்கங்கள் உயிரோடு இருக்கும் வரையில் நெல்சன் மண்டேலாவின் நினைவும் நீடித்திருக்கும்.

அண்மையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு

http://cchepeye.blogspot.in/

அண்மையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு தந்திருக்கின்றது. அதாவது தனிக்குடித்தனம் கோரும் மனைவிக்கு  ஒரு இந்து ஆண், கொடுமையின் அடிப்படையில்  மணவிலக்கு தரலாம் என்பது தான் அந்தத் தீர்ப்பு. இந்துப்  பண்பாட்டின்படி கணவனின் பெற்றோரிடமிருந்து பிரிப்பது தவறு என்றும் அப்படி செய்வது மேற்கத்திய பண்பாட்டின் தாக்கம் தான் எனவும் அந்தத் தீர்ப்பு கூறுகின்றது.
இந்தத் தீர்ப்பு இன்று பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கின்றது இன்றைக்கு உலகமயமாதல் என்ற நிலையில் அனைத்துத் துறைகளிலும் அரசும், மக்களும் மேற்கத்திய நிலைப்பாடுகளை தங்கள் உடையில், உணவில், நிர்வாகத்தில் பின்பற்றுகின்றபோது அதையெல்லாம் கேள்விக்கு உட்படுத்தாத இந்த நீதிமன்றம் இந்து குடும்ப அமைப்பு சிதைந்து விடக்கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காகவே இந்தத் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
எந்த மதமாக இருந்தாலும் அவள் ஆண் மகனைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற கட்டமைப்புத்தான் இங்கு நிலவுகின்றது. அன்றைய காலகட்டத்தில் பெண்ணுக்கு கல்வி, சொத்துரிமை என அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் அவள் ஆண்களை, அவன் வீட்டை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. இந்த சார்ந்திருத்தலின் பெரும் சங்கடம் என்னவென்றால் தன் உரிமைகள் நசுக்கப்படும் போது, தன் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்போதும் கூட அந்தப் பெண்கள் ஆண் வீட்டாரை எதிர்த்து வாய்த்திறக்க முடியாது. அப்படியே பேசினாலும் அவளின் கேள்விகளுக்கு அங்கே பதில் இருந்ததில்லை.
ஆனால் இன்று பெண் படித்து தன் சுய உழைப்பில் பொருள் ஈட்டுகின்றாள். அப்படி ஈட்டும் பொருளை தன்னை வளர்த்து படிக்க வைத்த பெற்றோருக்குத் தருவதை இன்றும் ஆண் வீட்டாரும் இந்தச் சமூகமும் ஏற்றுக்கொள்வதில்லை. அங்கே பிரச்சனைகள் வெடிக்கின்றன. ஒரு ஆண் மட்டுமே தன் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள கடமைப்பட்டவன் என்று இந்தச் சமூகம் இன்றும் நினைக்கும் என்றால் அதை கேள்விக்கேட்க வேண்டிய நிலையில் இருக்கும் நீதிமன்றங்கள் இது போன்ற தீர்ப்பு வழங்கினால் அது எவ்வளவு பெரிய மடமை என்று எண்ணிப்பார்க்க வேண்டும் நீதித்துறை.
தனிக்குடித்தனம் போவது தவறு எனச் சுட்டிக்காட்டும் இந்த நீதிமன்றம் ஆண்டாண்டுகளாய் பெண் தன் பெற்றோரிடமிருந்து பிரிந்து வந்து கணவன் வீட்டாருடன் அப்படியே எந்தச் சலனமுமின்றி ஒன்றிவிட வேண்டும் என்று நினைப்பது, இந்த 21 ஆம் நூற்றாண்டில் ; 2020 இல் வல்லரசு கனவு காணும் இந்தியாவில் இது போன்ற பிற்போக்குத்தனமான தீர்ப்பு மதப்பண்பாடு என்ற பெயரில் வழங்கப்படுவது சரியா என்று அறிவு நாணயத்தோடு சிந்திக்க வேண்டும்.
மேற்கத்திய தாக்கம் எனக் கூறும் நீதியரசர்கள் உண்மையில் மேற்குலகில் பெண்ணுக்கு கணவன் வீட்டாரின் ஆதிக்கம் இன்றி இணையர்கள் இருவரும் புரிந்து கொண்டு அன்பால் அவரவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து; தனிமனித உரிமைக்கு மதிப்பு கொடுத்து தங்களின் வேலையில் கவனம் செலுத்தி வாழ்கின்றனர். அங்கே ஆண்-பெண் இரு வீட்டாரும்  விரிவுபட்ட குடும்ப உறுப்பினர்களாக நடந்து கொண்டு இணையர்களின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடுவதில்லை. இந்தப் பண்பாடு எந்த வகையில் குறைந்துவிட்டது?.
பண்பாடு என்பது தனிமனித உணர்வுகளை மதிப்பதாக இருக்க வேண்டுமே தவிர்த்து, பெண் எனும் காரணத்தால் அவள் இன்றும் ஆணையும் அவன் குடும்பத்தாரையும் எதிர்த்து கேள்வி கேட்காமல் மடந்தையாய் கொடுமைகள் அனுபவிக்க வேண்டும் என்பது பண்பாடு அன்று. பொதுவாகவே இந்தியச் சமூகத்தில் மருமகனுக்கு கொடுக்கப்படும் மதிப்பு மருமகளுக்கு இன்றும் மறுக்கப்பட்டே வருகின்றது. மருமகள் எவ்வளவு படித்திருந்தாலும், நல்ல நிலையில் சமுதாயத்தில் மதிக்கப்பட்டாலும் அவள் கணவன் வீட்டார் பெண்ணை எவ்வளவு துன்புறுத்துகின்றனர், பெண்கள் எப்படியெல்லாம் வலிகளைக் தாங்கிக்கொண்டு குடும்ப அமைப்பில் சிதைக்கப்படுகின்றனர் என எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை பெண் திருமணத்திற்குப் பின் பெரிய சாதனைகளைச் செய்ய முடிவதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் விதிவிலக்குகள் எடுத்துக்காட்டாக முடியாது. பெரும்பாலும் தன் கணவன் வீட்டு உறவுகள் தரும் நெருக்குதல்களை, சமாளிக்கவே அவள் மூளையின் உயிரணுக்கள் செலவிடப்படுகின்றன என்பதே கசப்பான உண்மை.
பெண்கள் செய்யும் வீட்டுவேலைகளுக்கு அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என இதே உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. இந்தியா போன்ற குடும்ப அமைப்பு உள்ள நாட்டில் இந்தத் தீர்ப்பு வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கான பொருளாதாரத்தை பலப்படுத்தும்; அவளின் உழைப்பு திருமண வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படும் எனப் பலரால் வரவேற்கப்பட்டது. அது இன்னும் சட்டமாக்கப் படவில்லை எனினும் அதுபோன்ற பெண்களுக்காக தீர்ப்புகள் வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றம் இன்று கற்கால தீர்ப்புகள் வழங்கி பின்னோக்கிப் பயணிக்கின்றது என்பது வருத்தமே.