Monday, June 8, 2015

மேகி நுாடுல்ஸ்களை தடை

கர்நாடகாவில் விற்பனையாகும் மேகி நுாடுல்ஸ்களை தடை செய்யுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, குடும்பம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் காதர் தெரிவித்தார்.

சுகாதார துறை அமைச்சர் காதர், பெங்களூருவில், நிருபர்களிடம் கூறியதாவது:மக்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து, மேகி நுாடுல்ஸ் மட்டுமின்றி வேறு நிறுவனங்களின் நுாடுல்ஸ்களும், ஆய்வு மையத்துக்கு சாம்பிள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, மறு உத்தரவு வரும் வரை, மாநிலத்தின் அனைத்து பகுதியிலும், மேகி நுாடுல்ஸ் விற்பனை தடை செய்யப்படுகிறது. இருக்கும் சரக்குகளையும் திரும்பப் பெற, நெஸ்லே நிறுவனத்துக்கு உத்தரவிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தை மட்டும் குறிவைத்து, இம்முடிவு எடுக்கப்படவில்லை.

கடிதம்:கர்நாடகாவிலிருந்து, சி.எப்.டி.ஆர்.ஐ., - மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்படும் சாம்பிள்களை ஆய்வு செய்யுமாறு, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், சுகாதார துறை அமைச்சர் நட்டாவுக்கு கடிதம் எழுதவுள்ளேன். இதுகுறித்து, இங்குள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் விவாதிக்கவுள்ளேன்.

மார்க்கெட்டுகளில், மேகி நுாடுல்ஸ் விற்பனையாகாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு, உணவுத் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகளிடமிருந்து அறிக்கை கிடைத்தவுடன், சி.எப்.டி.ஆர்.ஐ.,யிடம் அனுப்பி, விளக்கம் கேட்கப்படும். எனர்ஜி பானத்தை ஆய்வு செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

காத்திருப்பு:இதுவரை, 24 மேகி சாம்பிள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், ஒரு நிறுவனம், தங்கள் பொருள் சரியாக உள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. இதை வைத்து, அனைத்தும் சரியாக உள்ளது என்று கூற முடியாது. மற்ற நிறுவனங்களிலிருந்து வரும் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

மாநிலத்திலுள்ள, மேகி நுாடுல்சின் நான்கு யூனிட்களில், மேகி தயாரிப்பை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை அரசின் உத்தரவை மீறி மாநிலத்தில் மேகி விற்கப்பட்டால்,
அந்நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கோல்கட்டா மத்திய உணவு ஆய்வு மையத்தில் கர்நாடகாகடந்த, 2014 டிச., 2ம் தேதி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பின் படி, கோல்கட்டா மத்திய உணவு ஆய்வு மையத்தின் கீழ், கர்நாடகா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வருகிறது.

அது மட்டுமின்றி பீகார், கோவா, டில்லி, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், யூனியன் பிரதேசங்களான தத்ரா மற்றும் நகர் அவேலி, தாமன் மற்றும் டையு, புதுச்சேரி ஆகியவையும் வருவதாக, -மைசூரு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சிநிறுவனம், அறிக்கையில் கூறியுள்ளது.


புனே:மகாராஷ்டிரா, மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில அரசுகளும், 'மேகி' நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்துள்ளன.

'நெஸ்லே' தயாரிப்பான மேகி நுாடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, காரீயம், ரசாயன உப்பு ஆகியவை அதிகமாக இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, தமிழகம் உட்பட, ஆறு மாநிலங்களில் இந்த நுாடுல்ஸ் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய உணவு மற்றும் தர ஆணையமும், நாடு முழுவதும் இந்த நுாடுல்சை விற்பனை செய்ய, நேற்று முன்தினம் தடை விதித்தது.

'மேகி நுாடுல்ஸ் பாதுகாப்பானதே; அதை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் வராது' என, 'நெஸ்லே' நிறுவனம் உறுதி அளித்தாலும், உணவு மற்றும் தர ஆணையம் அதை ஏற்கவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிரா, மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில அரசுகளும், மேகி நுாடுல்சின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பின. இதில், மேகி நுாடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காரீயம், ரசாயன உப்பு ஆகியவை அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த மூன்று மாநிலங்களிலும் மேகி நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய 'மேகி'யில் தான் ஆபத்து:சர்ச்சைக்குரிய, பாதுகாப்பற்ற இந்த மசாலா நுாடுல்ஸ், இந்தியாவிலுள்ள மேகி உற்பத்தி நிறுவனத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்களுக்காகவே, இவை இந்தியாவில்இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

இந்தியாவில் மேகிக்கு எழுந்துள்ள தடையால் பீதிக்குள்ளான பிரிட்டன் அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்குள்ள மேகி நுாடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்துள்ளது.

அதில், இந்தியாவிலிருந்து இறக்குமதியான மேகி நுாடுல்ஸ்களில் மட்டுமே பிரச்னையிருப்பது தெரிய வந்தது. பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் பிற மேகி உணவு வகைகளில், எந்தப் பிரச்னையும் இல்லையென்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

Monday, April 7, 2014

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

Dr-BR-Ambedkar
விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.
பிறப்பு: ஏப்ரல் 14, 1891
இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா
பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்
இறப்பு: டிசம்பர் 6,  1956
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.
1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.
உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்
பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.
சமூகப்பணிகள்
1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”
இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.
தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்
வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.
விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு
ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26,  1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.
பெளத்த சமயம் மீது பற்று
தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.
அம்பேத்கரின் பொன்மொழிகள்
  • “ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”
  • “ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”
  • “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”.
  • “சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”
  • “வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”
இறப்பு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

Wednesday, December 11, 2013

கோத்தகிரி, ஊட்டச்சத்துணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டச்சத்துணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ஊட்டி, : கோத்தகிரி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை சார்பில் ஊட்டச் சத்துணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 


பாண்டியராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். 

அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ‘நமது முன்னோர் விவசாயத்தின் மூலம் கிடைத்த உணவுகளை உண்டு வந்தனர். தற்போது நவீன உணவு வகைகளை பழக்கப்படுத்தி கொண்டோம். இந்த உணவுகள் மனிதர்களாகிய நமக்கு பாதகமாகி வருகிறது. டின் புட்ஸ், பாதுகாக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள் என எல்லாம் உப்பு மற்றும் அமில தன்மை உடைய உணவுகளாக மாறி வருகின்றன.

 இவற்றால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் 25 வயது முதலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பார்வை குறைபாடு, சத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளான ராகி, கம்பு, தினை, கோதுமை, சோயா, நெல் போன்ற உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் பொரித்த உணவுகள், நொறுக்கு தீனிகளை தவிர்த்து பருப்பு, பயறு, கடலை வகைகளை அவித்து உண்ணலாம். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்’ என்றார்.

மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ‘விளம்பரங்களை பார்த்து நமது உணவுகளை தேர்வு செய்கின்றோம். இவை உடலுக்கு எந்த பயனையும் தருவதில்லை. இதில் நிறம் மற்றும் சுவைகளாக சேர்க்கப்படும் ரசாயனங்கள் புற்று நோயை உண்டாக்குகின்றன’ என்றார். 
கோத்தகிரி நுகர்வோர் சங்க தலைவர் நாகேந்திரன் பேசுகையில், ‘சிப்ஸ், கார வகைகள், ஐஸ்கீரிம் போன்ற உணவுகளை தவிர்த்து, தரமான உணவுகளை வீடுகளில் தயாரித்து உண்ண பழகி கொள்ள வேண்டும்’ என்றார்.

Monday, November 18, 2013

நுகர்வோர்கள் குறைகளை தெரிவிக்க வேண்டிய வழிமுறை



 

மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அந்தக் குறைபாட்டை சலிப்புடன் சகித்துக் கொண்டே அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் இந்த சகிப்புத் தன்மையை சாதகமாகப் பயன்படுத்தி பெரும்பாலான வணிகப் பொருள்- உணவுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களில் கலப்படங்கள் கலந்து தயாரித்து விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இவை தெரிந்தும் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ கலப்படப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம்.
பொருளில் குறை இருப்பது தெரிந்தாலும் விற்பனை செய்பவரிடம் போய் குறையை சுட்டிக் காட்டுவதில்லை. ஒரு மளிகைக் கடையில் சலவை சோப்பு வாங்கி அதில் குறை இருந்தால் விற்றவரிடம் கேட்போம். அவர் மொத்த விற்பனையாளரைக் கை காட்டுவார். மொத்த விற்பனையாளர் தயாரிப்பு நிறுவனத்தைக் கை காட்டுவார். இந்த அடுத்தவரை கை காட்டும் அவலத்தால், பெரும்பாலான மக்கள் குறைகள் உள்ள பொருட்களை பயன்படுத்தியே பழகிவிட்டார்கள்.
நுகர்வோர் குறைகள் தீர்க்க பல அரசு அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் மக்கள் அவைகளை நாடுவதில்லை. காரணம் நேரம் காலம் வீணாகும் என்ற சோம்பல் கலந்த நினைப்பு. ஆனால் பணம் செலுத்தி பொருள் வாங்குபவர் தெரிவிக்கும் எல்லா குறைகளுக்கும் இழப்பீடு தரவேண்டியது விற்பவர்களின் கடமை என்பதை மறந்து நாம் அமைதியாக இருந்து விடுகிறோம்.  அதனால் மக்கள் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் நுகர்வோருக்கான உரிய அமைப்புகளை அணுகி தங்கள் குறைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நம் வாசகர்களுக்காக வழக்கறிஞர்கள் தந்த- நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டிய வழிமுறைகளைக் கொடுத்துள்ளோம்.

பொதுமக்கள், தாங்கள் வாங்கும் பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால்,  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986- ன்படி, நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவாரணம் பெறலாம். புகார் மனுவில், புகார்தாரரின் பெயர், முழு முகவரி, எதிர் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி, பொருள் அல்லது சேவையை பயன்படுத்திய விவரங்கள், புகாரின் தன்மை, ரசீதின் நகல் மற்றும் விவரம், இழப்பீட்டின் விவரம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு தனி நபர் நீங்கள் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்குகிறீர்கள். உத்திரவாத காலத்திற்குள் தொலைக்காட்சிப் பெட்டி பழுதடைந்து விடுகிறது. நீங்கள் உடனே விரைவுப் பதிவு அஞ்சல் மூலம் பழுது குறித்து தெரிவித்து நீங்கள் பொருள் வாங்கிய கடைக்கோ நிறுவனத்துக்கோ அனுப்புங்கள். இரண்டுவாரம் வரை சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்குச் சென்று நீங்கள் அனுப்பிய எழுத்துபூர்வ கடித நகலையும் பதிவு அஞ்சல் நகலையும் இணைத்து எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கலாம். குறைதீர் மன்றம் உங்கள் புகார் ஏற்கக் கூடியதுதானா என ஆராய்ந்து ஏற்கக் கூடியதாய் இருந்தால் ஏற்றுக் கொண்டு உங்களை அழைப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர் வழக்கறிஞர் மூலமும் கொடுகை அறிவிப்பு (claim notice) அனுப்பலாம். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் நுகர்வோர் நீதி மன்றத்தையும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்களையும் அணுகலாம்.  புகார் பதிவிற்கான கட்டணத்தை வங்கி விரைவுக் காசோலையாகவோ  அல்லது தபால் அலுவலகம் மூலம் பணம் செலுத்த வேண்டும். பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும் வழக்குக்கு உட்பட்டவரே. இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது.
உதாரணம்: மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி, உணவுப் பொருள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள், (உதாரணம்: பேக்கரி, இன்னபிற) மிதிவண்டி, – மோட்டார் சைக்கிள் – கார் – லாரி விற்பனையார், மருந்துக் கடைகள் , நியாயவிலைக் கடை போன்றவை.
பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் விநியோகம், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் , வங்கிகள், மருத்துவமனைகள், எரிபொருள் நிறுவனங்கள் , துணைப் பதிவாளர் அலுவலகம் போன்றவைகள்.
விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட மேல் உறையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், அதே மேல் உறையுடன் பொருளை உறையில் இட்டு வைத்திருக்க வேண்டும். எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் உறையைப் பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு  உறையைப் பிரிக்காமல் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டுபிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட உறையை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மறுபடியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, ரசீது போட்டு வாங்கிக்கொள்ளுங்கள். சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும்.
புகார் செய்வதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஒரு லட்ச ரூபாய் வரை, புகார் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. ஏனைய புகார்தாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவை மதிப்பின் அடிப்படையில், புகார் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில்தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றக் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை  மிரட்டுபவர்களும் அடங்கும். இதனால் வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டது. இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டில் கீழ்க்கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /- போன்ற கட்டண வரையறை செய்யப்பட்டது.
வழக்கு தொடருபவர்  நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக இருக்கவேண்டும். நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உள்ளன. சென்னையில் மயிலாப்பூரில் மாநில நுகர்வோர் நீதி மன்றம் உள்ளது. மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் மாநில அளவிலான நீதி மன்றத்தையும் அங்கும் தீர்வு கிட்டாவிட்டால் சென்னை உயர்நீதி மன்றத்தையும் அல்லது உச்ச நீதிமன்றத்தை நுகர்வோர்கள் அணுகி நிவாரணம் பெறலாம். மக்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தரமற்ற பொருள்களையும், அக்கறையற்ற சேவைகளையும் நுகோர்வோர்க்கு அளிப்போரை சட்டப்படி அணுகி நம் குறைகளுக்குத் தீர்வு காண்போம். ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர்வு மன்றங்கள் உள்ளன. அவற்றை மக்கள் அணுகலாம்.

மக்கள் அணுக வேண்டிய நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முகவரி:

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் 

தலைவர்,
மாநில நுகர்வோர் குறைதீர்
ஆணையம், எண். 212,
இராமகிருஷ்ண மடம் சாலை,
மைலாப்பூர், சென்னை – 600 004
044-24940687, 044- 24618900
மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்களின்  முகவரிக்கு 
http://cchepnlg.blogspot.in/2013/11/district-consumer-disputes-redressal.html  வரவும்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்