1918 ஆம் ஆண்டு சூலை 18 அன்று தென் ஆப்பிரிக்காவில், குலு கிராமத்தில் மண் குடிசையில் பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு. அவரது அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர், ஆயினும் மகனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். 1938ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால் மண்டேலா, முதலில் “கெல்ட் டவுன்” என்ற கல்லூரியிலும், பிறகு “போர்ட்ஹேர்” என்ற கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். போர்ட் ஹரே (fort hare ) பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத்தொடங்கியது. மாணவர் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்திய காரணத்தினால், கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் கல்வியை கைவிடவில்லை. நெல்சன் மண்டேலா மூன்று முறை வழக்கறிஞர் தேர்வில் தோற்றாலும் தன் விடாமுயற்சியால் வழக்கறிஞராகி ஆப்பிரிக்க பூர்வ குடிமக்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கினார்.
தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக இருந்த நிலையிலும், சிறுபான்மை வெள்ளையர்களே ஆட்சி அதிகாரங்களில் இருந்தனர். பெரும்பான்மை கறுப்பின மக்கள், மொழியால் பிரிந்து இருந்தபடியால் வெள்ளையர்கள் அவர்களை இலகுவாக அடக்கி ஆண்டனர்.
கறுப்பர்கள் நலனை பாதுகாக்க, அவர்கள் இன ஒடுக்கலைக் களைய 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இவரின் தலைமையில் அறப்போராட்டங்கள் ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 -ல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
பின் சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயல்பட்டதின் காரணமாக 1960-களில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960-ல் ஆப்பிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை சார்பெவில்லே நகரில் நடத்தினார். காவல்துறையின் அடக்குமுறை காரணமாக 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5 தேச துரோக குற்றம் செய்ததாக மண்டேலாவும் அவரின் தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 1961 இல் அனைவரும் விடுதலை பெற்றனர். அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாது என உணர்ந்த மண்டேலா ஆயுதமேந்தி போராட நினைத்தார். அந்த வழிமுறையை செயல்படுத்தினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையர் அரசு முடிவு செய்தனர். 1961 ஆம் ஆண்டு அரசின் நெருக்கடி காரணமாக மண்டேலா தலைமறைவானார்.
1962 ஆகஸ்ட் 5 ஆம் நாள் நெல்சோன் மண்டேலா வெள்ளையர் அரசால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தனர், கலகம் செய்தனர் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கு 1963 இல் ரிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டது. மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு சூன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1962ல் ஆரம்பித்த அவரின் சிறைவாசம் 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் தொடர்ந்தது. உலக வரலாற்றில் இன விடுதலைக்காக இவ்வளவு காலம் சிறையில் இருந்த தலைவர்கள் கிடையாது. மனைவியை சந்திக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு காரணத்தினால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்றன. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
“மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்றது தென்னாப்பிரிக்க அரசு. ஆனால் மண்டேலா இறுதி வரை அடிபணிய மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1990-ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை ஆகும் போது அவர் வயது 71. ஒரு தலைவர் தன் இன மக்களுக்காக தன் வாழ்நாளின் முக்கிய பகுதிகளை சிறையில் கழித்தார் என்பது என்றென்றும் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியது.
சிறைக் கொடுமைகளைப் பற்றி அவர் கூறும் போது , “சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை. சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்” என்று மிகப் பரிவோடு தன் மக்களின் வேதனையைத்தான், தன் சிறைவேதனையைவிட பெரிதாக நினைத்தார்.
இந்தியாவின் பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்கள் ஒரு பாராட்டுக் கடிதம் நெல்சன் மண்டேலாவுக்கு அவர் விடுதலை ஆன ஆண்டு அனுப்புகின்றார். அதில், “உங்களது சுதந்திரப் போராட்டத்திற்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று எழுதி அனுப்பினார்.
சிறையில் இருந்து கேப்டவுன் நகருக்குத் திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு கட்சியினர் மத்தியில் இவ்வாறு பேசினார்,
“இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் மக்களாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.” என்றார்.
1994 மே 10, அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபரானபோது,
“நம்மை ஒடுக்கியவர்களைப் பார்த்து நாமெல்லாம் தென்னாப்பிரிக்கர்கள் பழைய ரணங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய தென்னாப்பிரிக்காவை உருவாக்குவோம், எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நட்பு கரத்தை நீட்டுகிறேன் இந்த நாட்டை மறுநிர்மாணம் செய்ய உதவுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்”. என பெருந்தன்மையோடும், பொறுப்போடும் பேசினார் மண்டேலா!!
அவர் போராட்டத்தின் தூண்டுதலை இந்தியப் போராட்டத்தில் இருந்தே பெற்றார் என்பதை, “The Indian campaign became a model for the type of protest that we in the youth league were calling for” (இளைஞர் இயக்கத்தின் சார்பில் நாங்கள் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு இந்தியர்கள் நடத்திய இயக்கமே முன் மாதிரியாக இருந்தது.) என்றார்.
பாரத ரத்னா விருதும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது. அவருடைய பிறந்த நாளை ஐ.நா சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்தது.
1993 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு நெல்சன் மண்டேலாவிற்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்தபின் 1999-ம் ஆண்டு பதவியை விட்டு விலகினார். இரண்டாவது முறை அவர் அதிபராக விரும்பவில்லை.
‘46664’ எனும் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினார் நெல்சன் மண்டேலா.
‘எய்ட்ஸுக்காக உங்கள் வாழ்வில் இருந்து ஒரு நிமிடத்தை ஒதுக்குங்கள்’ என்னும் வாசகத்துடன் தொடங்கப்பட்ட பரப்புரை, பரவலான கவனத்தைப் பெற்றது. (466 என்பது ரோபன் தீவுச் சிறையில் மண்டேலாவின் கைதி எண். 64 சிறையிலிருந்த வருடத்தைக் குறிக்கிறது). நான் ஒரு எய்ட்ஸ் நோய் சிகிச்சை ஆதரவாளர் என்னும் வாசகத்தை தனது டி ஷர்ட்டில் அணிந்து பெருமிதத்துடன் வலம் வந்தார். 2005ல் ஒரு கூட்டத்தில், வெடித்துக் கிளம்பிய அழுகைக்கிடையே ஓர் உண்மையை ஒப்புக்கொண்டார். ஆம், என் சொந்த மகன் மக்காதோ, எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு, இறந்துபோனான். தென் ஆப்பிரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் ஒன்று சேர்ந்து எய்ட்ஸை விரட்டியடிக்கவேண்டும் என்றார்.
” I detest racialism, because I regard it as a barbaric thing, whether it comes from a black man or a white man.” “கறுப்பர்கள் செய்தாலும், வெள்ளையர்கள் செய்தாலும் நான் இனவாதத்தை முழுவதும் வெறுக்கிறேன், ஏனெனில் இனவெறி என்பது காட்டுமிராண்டித்தனம்” என்பார் நெல்சன் மண்டேலா.
ஆப்பிரிக்காவின் முதன்மையான மகன் என மண்டேலாவை வருணிக்கின்றார் கியூபா புரட்சியாளர் காஸ்ட்ரோ. மண்டேலா ஆப்பிரிக்காவுக்கோ, ஐரோப்பாவிற்கோ சொந்தமானவர் அல்லர், அவர் உலகுக்கு சொந்தமானவர் என்கிறார் மண்டேலாவால் ஈர்க்கப்பட்டு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நதின் கார்டிமர்.
2013 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி நெல்சன் மண்டேலா எனும் போராட்டக்காரர் தன் பயணத்தை முடித்துக்கொண்டார். அவரின் வாழ்க்கையின் மூலம் அவர் சொன்ன வாக்கியங்கள் இவை.
“விடுதலையை யாராலும் கொடுக்கமுடியாது. பேச்சுவார்த்தைகள் மூலம் பெறமுடியாது. போராடித்தான் பெற்றாகவேண்டும். வாழ்க்கை என்பது போராட்டமே!.” உலகத்தில் விடுதலை இயக்கங்கள் உயிரோடு இருக்கும் வரையில் நெல்சன் மண்டேலாவின் நினைவும் நீடித்திருக்கும்.
“விடுதலையை யாராலும் கொடுக்கமுடியாது. பேச்சுவார்த்தைகள் மூலம் பெறமுடியாது. போராடித்தான் பெற்றாகவேண்டும். வாழ்க்கை என்பது போராட்டமே!.” உலகத்தில் விடுதலை இயக்கங்கள் உயிரோடு இருக்கும் வரையில் நெல்சன் மண்டேலாவின் நினைவும் நீடித்திருக்கும்.
No comments:
Post a Comment